கொடை
செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் முத்தாரம்மன் கோயில் கொடைக்குத் திங்கள் இரவு தூங்காமல் விழித்திருந்து
புளிச்சோறு செய்து தூக்குவாளியில் நிரப்பி வைப்பாள், அம்மா.
முழுக் குடும்பத்துக்கும் ஒரேயொரு வண்டி பிடித்து
வாழைக்குலைகளையும் ஏற்றிக் கொண்டு
இடமில்லாமல் பெரியவர்கள் மடியில் உட்கார்ந்தபடி செல்வோம் நாங்கள்.
மேளச் சத்தம் கேட்டதும்
சாமிவந்து மாமா ஆட
அவிழப் போகும் வேட்டியைப் பெரியப்பாவும் சித்தப்பாவும் இறுக்கிக் கட்டுவார்கள்
திருவிழாக் கடைகளில்
"தேவுடா தேவுடா" பாடும் பொம்மை செல்போன் கேட்டு அம்மாவிடம் அடம்பிடிப்போம்..
"இந்த வருஷம் அப்பா கிட்ட காசு இல்ல அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்கித்தரேன்" என்று போன வருஷத்தில் சொன்ன அதே வசனத்தைச் சொல்லிச் சமாளிப்பாள், அம்மா.
நீ இப்போ வாங்கித் தரலனா
பெரிய புள்ளையா ஆனதும்
உனக்குச் சம்பாதிச்சுத் தரமாட்டேன் என்று தரையில் புரண்டு அழுவேன் நான்.
அழுது கொண்டிருக்கும் என்னை இழுத்து வருவாள், பாட்டி.
சோகத்தோடு தூங்கிவழிந்தபடியே மறுநாள் பள்ளிக்குச் செல்வோம் நாங்கள்..
கருத்துகள்
கருத்துரையிடுக