இடுகைகள்

குலசை முத்தாரம்மன்

படம்
மாலை அணிந்து விரதமுற்று, காலையும்  மாலையும் நீராடி, பக்தியோடு வேடமிட்டுக் கோவிலுக்கு நாம்வந்தால் நற்றுணையாய் நிற்பாள்  குலசையின் முத்தாரம் மா.

உதயத்தூர் முத்தாரம்மன்

படம்
தூக்குவாளி மூடிவரை சோறடைத்து வண்டியேறி மூக்குவாளி போட்டஉனை நாடிவந்து போற்றிடுவோம் சீக்கிரமாய் எங்களுக்கு நல்லவழி தந்துதவி ஆக்கிடுவாய் முத்தாரம் மா. காத்தாடி நூறு சுழல்கின்ற இவ்வூரில் "ஆத்தா" வியர்க்கா துனக்கு! - அதுபோல் இதயத்தில் நீநின்று எப்போதும் காப்பாய் உதயத்தூர் முத்தாரம் மா.

ஆத்திக்குறள்

 அடிமைத் தளையை உடைத்து, சகாநீ ஆகாயம் தாண்டிப் பற. இல்லை எனநீ நுவலாமல் ஏழைக்கு ஈந்தால் நலமே உனக்கு.  உலகில் அருங்கொடை கானலாய் ஆனாலும் ஊட்டி விடுநிறைய அன்பு.  என்றைக்கும் எப்போதும் எங்கேயும் யாரையும்  ஏமாற்றிச் சேர்க்காதே காசு.  ஐபோனோ ஆண்ட்ராய்டோ நாளை எதிரியோடு  ஒன்றாக நீஎடுப்பாய் செல்பி.   ஓயாது வேலையைச் செய்;பசித்த பின்பேஉண் ஒளடதம் தேவை இல. கஃறென்ற என்மனம் நீவந்த பின்னால்தான்  வெஃகியதே வாழ்க்கையை மெல்ல.

தமிழ் இனிது

அற்றைத் திங்கள் பொதிகையில்      உதித்த தெங்கள் தமிழி ஒற்றைக் காலில் நிற்குமவள்    பிடிவா தமான அழகி மூன்று கொம்பு முளைத்ததனால்       அடக்க முடியா வீரம் மூண்டு வந்த பகையினையே        முட்டிச் சாய்க்கும் தூரம் ஆய்தம் ஒன்று ஏந்திநிற்கும்       மாய அணங்கு அவளை நோய்கள் தீண்ட வந்தாலும்       என்றும் இல்லை கவலை  அகரம் முதலாய்க் கொண்டதுதான்       சிகரம் ஏறி நிற்கும் நகரம் கிராமம் எங்கேயும்       "ழகரம்" சிறப்பைக் கூட்டும் ஏகம் பநாதன் பாடியதால்       இகமும் பரமும் சேரும் முகநூல் புலனம் தானமர்ந்து      அகமும் புறமும் பேசும்  திணிக்கும் மொழியை விரும்பாமல்      இனிக்கும் அவளைப் படித்தால் மணக்கும் திசைகள் எங்கேயும்     இனிதாய் வாழும் தமிழே.

காதல் ஒரு கவிதை

கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும், அழுதுகொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.  செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான். "செல்வி! செல்வி! நில்லு.  ஏன் இவ்ளோ வேகமாப் போற? உன்கிட்ட ஒரு விஷயம்  சொல்லணும்" என்றபடி  மூச்சிரைக்க ஓடி வந்தான், அகிலன். அவளின்  கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.  "ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?" "அப்டிலாம் சொல்லாத, உன்ன எல்லோருக்கும் புடிக்கும். நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்" என்று அவளை ஆசுவாசப் படுத்தினான். ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளுடைய விரல்களை மெதுவாகப் பிடித்துக் கொண்டான். அவளும் எதைப்பற்றியும் யோசிக்காமலும் உதறி விட மனமில்லாமலும் தன் உள்ளங்கை வியர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள். மௌனம் பேசிக்கொண்டு இருவரும் விரல்களைக் கோத்தபடியே கம்பெனி பேருந்தில் ஏறினார்கள். வற்றிய கண்ணீரோடு அவன் தோளின் மேல் சாய்ந்து கிடந்தாள். பேருந்து சென்றுகொண்டே இருந்தது. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் "ஆமா நீ ஏதோ ஒரு...

மதிய உணவுத் திட்டம்

மணியடித்ததும் வேக வேகமாக ஓடி இடத்திற்கு வருவோம் அவிச்ச முட்டை கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் .. முதல் இடத்தை யார் பிடிப்பது?  என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். என்றைக்கும் போல் குழைந்து போன சோறும், தாளித்துக் கொட்டிய வெங்காயம் மிதக்கும் பருப்புக் குழம்பும் அமுதமாய் இருக்கும் எங்களுக்கு... சிலநாளில்,  அவித்த முட்டையைப் புத்தகப்பையிலே வைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்வோம்  அது பையிலேயே ஆம்லேட்டாய் மாறிவிடும் வீட்டுக்குச் செல்வதற்குள்… சட்டைப் பையில் போட்டு பச்சைப்பயிறு தின்றதெல்லாம் நினைத்தாலே இனிக்கிறது  இப்பொழுது வேலை பார்க்கும் இடத்தில் அதே சுவையில் அவித்த முட்டை கிடைக்கும் போதெல்லாம் மனசு ஏங்குகிறது  "அதே வெங்காயம் மிதக்கும் பருப்புக் கொழம்புக்கு"

கொடை

  செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் முத்தாரம்மன் கோயில் கொடைக்குத் திங்கள் இரவு தூங்காமல் விழித்திருந்து  புளிச்சோறு செய்து  தூக்குவாளியில் நிரப்பி வைப்பாள், அம்மா. முழுக் குடும்பத்துக்கும் ஒரேயொரு வண்டி பிடித்து  வாழைக்குலைகளையும் ஏற்றிக் கொண்டு இடமில்லாமல் பெரியவர்கள் மடியில் உட்கார்ந்தபடி செல்வோம் நாங்கள். மேளச் சத்தம் கேட்டதும்  சாமிவந்து மாமா ஆட  அவிழப் போகும் வேட்டியைப் பெரியப்பாவும் சித்தப்பாவும் இறுக்கிக் கட்டுவார்கள்    திருவிழாக் கடைகளில் "தேவுடா தேவுடா"  பாடும் பொம்மை செல்போன் கேட்டு அம்மாவிடம் அடம்பிடிப்போம்..   "இந்த வருஷம் அப்பா கிட்ட காசு இல்ல அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்கித்தரேன்" என்று  போன வருஷத்தில் சொன்ன அதே வசனத்தைச் சொல்லிச் சமாளிப்பாள், அம்மா. நீ இப்போ வாங்கித் தரலனா பெரிய புள்ளையா ஆனதும்  உனக்குச் சம்பாதிச்சுத் தரமாட்டேன் என்று தரையில் புரண்டு அழுவேன் நான். அழுது கொண்டிருக்கும் என்னை இழுத்து வருவாள், பாட்டி. சோகத்தோடு தூங்கிவழிந்தபடியே மறுநாள் பள்ளிக்குச் செல்வோம் நாங்கள்..